கீற்று: இலங்கை விடுதலைக்குப் பின் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கூறமுடியுமா?
1915, 1976 தாக்குதல்களுக்குப் பிறகு சிங்களத் தரப்பால், முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட முக்கிய தாக்குதல்களாக 1990 ஜூலை வவுனியாவில் முஸ்லிம் மக்களுக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய லாரிகளைக் கடத்தி 4 முஸ்லிம்களைக் கொல்லப்பட்டதைச் சொல்லலாம். 1990 ஜூலை 31ல் அனுராதபுரம் மாவட்டத்தில் உடப்பாவல சின்னசிப்பிக்குளத்தில் 10 முஸ்லிம்கள் சிங்களர்களால் கொல்லப்பட்டு, அவர்களது சடலங்கள் கிணற்றில் வீசப்பட்டது. 1998 எலபெடகம, பன்னல ஆகிய கிராமங்கள் தாக்கப்பட்டது. வீடுகள் எரிக்கப்பட்டன; 16 பேர் அளவில் படுகாயமடைந்தனர். 2001ம் ஆண்டு மே மாதம் மாவனெல்லையில் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் சிங்களர்களால் எரிக்கப்பட்டன. ஒருவர் கொல்லப்பட்டார். பலர் படுகாயமடைந்தார்கள். பள்ளிவாசல்கள் எரிக்கப்பட்டன. 2002ம் ஆண்டு பேருவளை என்ற ஊரில் முஸ்லிம்களின் மீன்பிடி படகுகள் சிங்களர்களால் எரிக்கப்பட்டன. அதே ஆண்டு கொழும்பு மருதாணையில் பள்ளிவாசலுக்குச் சொந்தமான காணியை முன்னிட்டு எழுந்த மோதலில் பல முஸ்லிம்கள் காயப்படுத்தப்பட்டனர். அதற்குப் பின் கொழும்பில் இருந்த இணக்கமான சூழல் விலகி, ஒருவரையொருவர் சந்தேகமாகப் பார்க்கின்ற நிலை ஏற்பட்டது. 2003ம் ஆண்டு 'காலி'யில் உள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் சில, சிங்களர்களால் எரிக்கப்பட்டன. 2007ல் தர்காநகர் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் சில எரிக்கப்பட்டன. வருடம் சரியாக நினைவில்லை, ஒரு அரசியல் பிரச்சினை காரணமாக பேருவிளையில் 3 முஸ்லிம்கள் கொல்லப்பட்டு, 11 பேர் அளவில் காயப்படுத்தப்பட்டார்கள். இதைத் தவிர சின்ன சின்ன தாக்குதல்கள் சிங்களர்களால் ஆங்காங்கே மேற்கொள்ளப்பட்டது.
தமிழர்கள் தரப்பு என்று பார்த்தால், 1985ம் ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி வாழைச்சேனை பகுதியில் 8 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதுதான் கிழக்கில் நடந்த முதலாவது கூட்டுப்படுகொலை. எந்த இயக்கம் செய்தது என்று தெரியவில்லை. 1986ல் மன்னார் பள்ளிவாசலில் ஈரோஸ் இயக்கம் தாக்கியதில் பலர் கொல்லப்பட்டனர். 1987 மார்கழி 30ம் தேதி காத்தான்குடியில் 28 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். அதேமாதம் 60 முஸ்லிம் குடியிருப்புகள் காத்தான்குடி எல்லையில் எரிக்கப்பட்டன. இது புலிகள் செய்ததாக நம்பப்படுகிறது.
1988 பங்குனியில் கல்முனையில் 25 முஸ்லிம்கள் புலிகளால் கொல்லப்பட்டார்கள். 1988 கார்த்திகை மாதத்தில் 42 முஸ்லிம் போலிஸார்களை மட்டும் தெரிவு செய்து, ஈ.என்.டி.எல்.ப், ஈ.டி.ஆர்.எல்.எப், ஈரோஸ் ஆகிய அமைப்புகள் இணைந்து உருவாக்கிய தமிழ்த்தேசிய இராணுவம் கொன்றது. 1989 டிசம்பர் 10ம் தேதி, 12 முஸ்லிம்கள் கிழக்கில் கொல்லப்பட்டனர். 1990 பிப்ரவரி 1ம் தேதி காத்தான்குடியில் ஊரடங்குச் சட்டத்தைக் கொண்டு வந்து விடுதலைப்புலிகள் வீடு வீடாக சோதனை செய்து இலங்கை இராணுவத்திற்கு ஆதரவாக இருப்பவர்கள் என்னும் ஐயத்தில் முப்பது பேரைச் சிறை பிடித்தார்கள். அதே நாளில் கல்முனையில் நாற்பது பேரைச் சிறை பிடித்தார்கள்; முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர் மன்சூர் சுட்டுக் கொல்லப்படுகிறார். மருதூர் கனி கடத்தப்பட்டார்.
கல்முனை சிறைப்பிடிப்பை எதிர்த்து புலிகள் அலுவலகத்தின் முன் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது புலிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பதினேழு பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள். அப்படிச் சேர்க்கப்பட்டவர்களில் ஐந்துபேரை மருத்துவமனையில் வைத்து, சுட்டுக் கொன்றார்கள்; பத்துப்பேரைச் சிறை பிடித்துச் சென்றார்கள். 1990 ஜூலை 16 மட்டக்களப்பு குறுக்கன்மடம் என்னும் இடத்தில் 68 ஹஜ் யாத்ரிகர்கள் கொல்லப்பட்டார்கள். ஆகஸ்ட் 3ம் தேதி காத்தான்குடி பள்ளிவாசல்கள் இரண்டில் 126 பேரும், மஜித்புரத்தில் 7 பேரும், செம்மாந்துறையில் ஒரு தந்தையும் மகனும் கொல்லப்படுகிறார்கள். ஆகஸ்ட் 6ம் தேதி அம்பாறையில் 33 பேர் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். ஆகஸ்ட் 12ம் தேதி ஏராவூரில் 116 பேர் கொல்லப்பட்டார்கள். 60க்கும் மேற்பட்டோர் காயப்படுகிறார்கள். இதுதவிர மேலும் பல தாக்குதல்கள் நடைபெற்றன; மேலும் பலர் கொல்லப்பட்டனர்.
யார் எதைச் செய்தாலும் அதைப் புலிகள் தாம் செய்திருப்பார்கள் என்னும் எண்ணத்தை இப்படிப்பட்ட நிகழ்வுகள் அனைத்தும் முஸ்லிம் சமூகத்திடம் முழுமையாகத் தோற்றுவித்து விட்டது. அதற்குப் பிறகு விழுந்த பெரிய அடிதான் வடக்கிலிருந்து 1990 அக்டோபரில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது ஆகும். 1992 ஏப்ரல் 26ல் அழிஞ்சிப்பொத்தானையிலும், செப்டம்பரில் பள்ளித்திடலிலும் மொத்தம் 300க்கும் மேற்பட்டோர் மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள்.
பிற்பட்ட காலங்களில் முஸ்லிம் பகுதிகளில் தனித்தனியாக கொலைகள், ஒரு சில ஆட்கடத்தல்கள், கொள்ளைகள், கப்பம் பறித்தல் போன்ற சில செயற்பாடுகள் நடந்தன. ஆனால் உண்மையில் புலிகளுக்கும் அச்செயல்களுக்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை. புலிகள் செய்யாத கொலைகள், கொள்ளைகள் ஆகியன கூட புலிகள் அமைப்புதாம் செய்ததாகப் பட்டியல் போடப்பட்டது. உதாரணமாக 2002 காலப்பகுதியில் ஓட்டமாவடி பிரதேசத்தில் இராணுவப் புலனாய்வுத் துறையில் செயற்பட்ட அஸீஸ் என்பவரின் படுகொலை, புலிகளால் செய்யப்பட்டது என்று கூறப்பட்டது. போர்நிறுத்தக்காலத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் புலிகளுக்கு சர்வதேச ரீதியில் அபகீர்த்தி ஏற்படுத்திய செயல். ஆனால் இது முஸ்லிம்களாலேயே தனிப்பட்ட காரணங்களுக்காக நடைபெற்ற கொலையாகும்.
இரண்டு தனிநபர்களின் பிரச்சனைகள் கூட இனரீதியாகப் பாதிக்கும் சம்பவங்களும் நிறைய நடந்திருக்கின்றன. உதாரணமாக 2002 ஜூன் 27, 28, 29களில் வாழைச்சேனை என்ற இடத்தில் உள்ள வர்த்தக மையங்கள் புலிகளால் தாக்கப்பட்டு பொருட்கள் லாரியில் ஏற்றிச்செல்லப்பட்டது. கடைகள் எரிக்கப்பட்டன. 12 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கலவரம் போர்நிறுத்தம் அமுலில் இருந்த காலத்தில் நடந்தது. இந்தச் சம்பவம்தான் 'இனி மாற்றவே முடியாது' என்றளவிற்கான வெறுப்பை புலிகள் மேல் முஸ்லிம்களிடம் ஏற்படுத்தியது. இதற்குப் பின்னணி என்னவென்றால், மீனவ முஸ்லிம் ஒருவர் இளங்கீதன் என்ற புலிகள் அமைப்பைச் சேர்ந்தவரிடம் மீன்பிடி டைனமைட் உபகரணம் வாங்குவதற்காக 50 ஆயிரம் ரூபாய் பணம் தருகிறார்.
புலிகள் அமைப்பு என்பது கட்டுக்கோப்பான இயக்கம். எனவே இதுபோன்ற வேலைகளைச் செய்ய முடியாது. தலைமைக்குத் தெரியாமல் சின்னவன் என்பவரோடு இணைந்து இளங்கீதன் இந்த வேலையைச் செய்கிறார். ஜூன் 25 ம் தேதி பணம் வாங்குகிறார். 26 ம் தேதி முஸ்லிம் மீனவர் சென்று டைனமைட் கேட்டபோது அவர் செங்கல்லைப் பொதி செய்து கொடுத்து, தோணியில் அழைத்துச் செல்கிறார்கள். பொதியில் இருப்பது செங்கல் என்பது மீனவருக்குத் தெரியவர விவாதம் செய்கிறார். இளங்கீதனும், சின்னவனும் அவரைக் கொன்று விடுகின்றனர்.
தமிழ்ப்பகுதியில் நடந்ததால் பழி புலிகளின்மேல் விழுகிறது. இதைப் புலிகள் விசாரணை செய்கிறார்கள். விசாரணையிலிருந்து தான் தப்பிக்க வேண்டி, ஒரே சாட்சியாக இருந்த சின்னவனை இளங்கீதன் கொன்று விடுகிறார். இப்போது பிரச்சினை வேறு வடிவம் பெறுகிறது. ஒரு முஸ்லிம் கொல்லப்பட்டதற்குப் பதிலாக, ஒரு தமிழர் முஸ்லிம் தரப்பால் கொல்லப்படுகிறார் என்று திசைமாறுகிறது.
கீற்று: சிங்களர்களுடன் இணைந்து கொண்டு சில முஸ்லிம்கள் புலிகளுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டதாகவும், காட்டிக் கொடுத்ததாகவும் அதனால் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டது என்று சொல்லப்படுகிறதே! அதைப் பற்றி கூற முடியுமா?.
இதில் நிறைய விடயங்களை நாம் கதைக்க வேண்டியிருக்கிறது. புலிகள் அமைப்பில் முஸ்லிம்கள் இருந்தது போலவே பிற போராளி அமைப்புகளிலும் முஸ்லிம்கள் இருந்தார்கள். இன்னும் சொல்லப்போனால் இலங்கை இராணுவத்திலும் தென் மாகாணத்தில் இருந்த முஸ்லிம்கள் அதிகளவில் இருந்தார்கள். ஏனெனில் தென்மாகாண முஸ்லிம்களுக்கு வடக்கிலும் கிழக்கிலும் இருந்த முஸ்லிம்களின் சிக்கல்களோ போர்ச்சூழலோ விளங்காது. இந்தப் போராளி அமைப்பில் இருந்து பிற போராளி அமைப்புகளுக்கு உளவு சொல்பவர்களாக இருந்தவர்களை அந்தந்தப் போராளி அமைப்புகள் காட்டிக்கொடுப்பவர்களாகப் பார்ப்பதும் பிற போராளி அமைப்புகள் சிறந்த உளவாளியாகப் பார்ப்பதும் இயல்பானது தானே! அப்படி இருந்தவர்களை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்தமாகக் காட்டிக்கொடுத்தவர்கள் என்று சொல்வது சரியான நிலையாக இருக்காது. அப்படிப்பட்டவர்களை அணுகிய விதத்தில் புலிகள் பிழை விட்டுவிட்டார்கள் என்று தான் கருத இடம் உண்டு.
காட்டுக்குப் போய் விறகு வெட்டி அன்றாடம் பிழைப்பு நடத்தும் ஒரு முஸ்லிம் விறகுவெட்டியைச் சிங்கள இராணுவம் பிடித்து, புலிகள் பற்றிச் சொல்லாவிட்டால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டினால் அவனால் என்ன செய்ய முடியும்? அவன் தான் கண்டதை இராணுவத்திடம் சொல்லிவிட்டு வந்து விடுவான். இதைக் காட்டிக்கொடுப்பாக எடுப்பது சரிதானா? அதேநேரத்தில் புலிகளின் பிரதேசங்களுக்கு பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட காலங்களில் இராணுவம் மிகக்கடுமையாக தமிழ்ப் பிரதேசங்களுக்குச் சென்ற முஸ்லிம்களிடம் சோதனை செய்தது. அதையும் தாண்டி, அரசாங்கத்தின் அறிவித்தலுக்கு விரோதமாக புலிகளுக்கு மண்னெண்ணய், தீப்பெட்டி, அரிசி ஆகியவற்றைக் கொடுத்தார்கள். பதிலுக்கு புலிகள் அவர்களது தொழில் நடவடிக்கைகளை இலகுவாகச் செய்ய சலுகைகளை வழங்கினார்கள். இவ்வாறான செயற்பாடுகளைச் செய்த முஸ்லிம் மக்கள் மீது இராணுவம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது. இதை வைத்து மொத்த முஸ்லிம்களும் இப்படித்தான் என்ற நிலைப்பாட்டை இராணுவம் எடுக்கவில்லை. முஸ்லிம்கள் தங்களுக்குச் சாதகமானவர்கள் என்று நம்பியது. இதை எப்படி எடுத்துக்கொள்வது? அத்துடன் எந்தப் பக்கமும் சாராமல், தான் உண்டு தன் பாடு உண்டு என்றிருந்த முஸ்லிம்களும் பெரும்பான்மையாக இருக்கத்தானே செய்தார்கள்?
இலங்கை அரசப் படையின் அனைத்துப் பிரிவுகளிலும் முஸ்லிம்கள் அங்கத்துவம் பெற்றிருந்தார்கள். குறிப்பாக மலேய முஸ்லிம்கள் இராணுவத்தின் நம்பகத்தன்மை வாய்ந்த முக்கிய பொறுப்புகளில் இருந்தார்கள். அரசப்படை தமிழர்களைக் கைது செய்கிறது என்றால், அங்கு விசாரணை நடத்துபவர்களாக முஸ்லிம்கள்தான் இருந்தனர். இதற்கு ஒரே காரணம் அரசப் படைகளில் இருந்த முஸ்லிம்கள் தமிழ், சிங்களம் இரண்டு மொழிகளையும் தெரிந்தவர்களாக இருந்தார்கள் என்பதுதான். இது வெளியே எப்படி பேசப்பட்டது என்றால், முஸ்லிம்கள்தான் சிங்களவர்களின் கைக்கூலிகளாக இருந்து தமிழர்களைக் கொடுமைப்படுத்துகிறார்கள், காட்டிக் கொடுக்கிறார்கள் என்று சாதாரண மக்கள் கூட பேசும் நிலை ஏற்பட்டது.
கீற்று: முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் ஊர்க்காவல் படையாக அமைந்து தமிழ்ப்போராளிகளைத் தாக்கினார்கள் என்ற கருத்து நிலவுகிறதே, அது எந்தளவுக்கு உண்மை?
1987களின் பிற்பாடு வடக்கிலும், 1990களில் கிழக்கிலும் முஸ்லிம் பிரதேசங்களின் பாதுகாப்பை அவ்வவ்பிரதேச முஸ்லிம்களே உறுதிப்படுத்தும் பொருட்டு, ஊர்க் காவல் படை என்ற ஒன்றை அரசு பரவலாக அமைக்கிறது. அவர்களுக்கான பயிற்சியும், ஆயுதமும் அரசினாலேயே கொடுக்கப்பட்டது. இந்தக் குழுக்களை தனியாக முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் என்று பார்க்கமுடியாது. இருப்பினும் இந்த ஊர்க்காவல் படையினர் அப்பாவி தமிழ் மக்கள் மீதும் சில சந்தர்ப்பங்களில் தாக்குதல்களைச் நடத்தியிருக்கிறார்கள். இராணுவத்தோடு இணைந்து புலிகளுக்கு எதிராக பல செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். பிரதேசம் குறித்து இவர்களுக்கு எல்லாத் தகவல்களும் தெரியும் என்பதால், இராணுவத்தை வழிநடத்தும் பணிகளிலும் ஈடுபட்டார்கள். 1990களில் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பின்னர், அந்தப் பகுதி இளைஞர்கள் 500க்கும் மேற்பட்டோர் இராணுவத்தில் இணைந்து புலிகளுக்கு எதிராக பாரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். தல்லாடி இராணுவ முகாம் பலப்படுத்தல், மன்னார் தீவுப்பகுதிகளை கைப்பற்றுதல் ஆகியவற்றில் பெரும்பங்கு வகித்தார்கள்.
இப்படி முஸ்லிம் பிரதேசங்களைப் பாதுகாப்பதற்காக ஆயுதம் ஏந்துவது ஒரு புனிதப்பணியாகக் கூட முஸ்லிம் பிரதேசங்களில் பிரச்சாரம் பண்ணப்பட்டது. இந்த அடிப்படையில்தான் இந்த ஊர்க்காவல் படையினர் ஜிகாத் குழுக்கள் என்கிற பெயரால் அழைக்கப்பட்டனர். இது மொத்த சமுதாயத்தையும் பாதிக்கும் அளவிற்குச் சென்றது. ஜெனிவாவில் அரசுக்கும் புலிகளுக்கும் நடந்த ஒரு பேச்சுவார்த்தையில் முஸ்லிம் ஜிகாத் குழுக்கள் என்ற அம்சமே ஒரு தனி பேசுபொருளாக மாறியிருந்தது. இதை இன்றளவும் முஸ்லிம் சமூகம் உணரவில்லை. ஜிகாத் குழுக்கள் என்றாலே மூதூர் மற்றும் காத்தான்குடி ஆகிய பிரதேசங்கள்தான் மையப்பகுதி என்ற கருத்தோட்டம் இப்போதுவரை கூறப்படுகிறது.
கீற்று: முஸ்லிம் தரப்புக்கும் ஈழப்போராட்டக் குழுக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் விடுதலைப் புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றுகிறார்கள். வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் எந்தமாதிரியான இன்னல்களை அனுபவித்தார்கள்? அவர்களுக்கு இலங்கை அரசு போதிய உதவிகள் செய்ததா?
முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக நடைபெறுகிறது. விடுதலைப் புலிகள் 1990 அக்டோபர் 18 ஆம் தேதி முல்லைத்தீவு ஊர் பெரியவர்களிடம் சொல்கிறார்கள், 'கிழக்கிலிருந்து ஒரு படை வரப்போகிறது. அவர்கள் முஸ்லிம் இளைஞர்களைப் பிடிக்கப்போகிறார்கள். அதனால் உங்க இளைஞர