Re: சிங்களப் பேரினவாதம் முஸ்லிம்களையும் ஒடுக்குகிறது-முஸ்தீன்
Monday, August 2, 2010
கீற்று: இலங்கை சுதந்திரம் அடைந்தபிறகு நிலைமை எப்படி இருந்தது?
1948 சுதந்திரத்திற்குப் பிறகு, 1956ல் தனிச்சிங்கள சட்டம் வந்தபோது மொழிரீதியான பிரச்சனை கூர்மையடைகிறது. தமிழ் பேசுகிறவன் வேறு, சிங்களம் பேசுகிறவன் வேறு என்கிற பிரிவினை வந்தது. முஸ்லிம்கள் சிங்களர்கள் வாழும் பகுதியில் அவர்களோடு கலந்து வாழ்ந்தாலும் அவர்களது தாய்மொழி தமிழாகத்தான் இருந்தது. சிங்களர் பகுதிகளில் வாழ்ந்திருந்தாலும், அவர்களது கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் தமிழிலேயே இருந்தன. ஆனால் அவர்கள் தமிழர்கள் என்ற இனத்திற்குள் அடக்கப்படவில்லை. தமிழ் பேசும் இந்து, கிறிஸ்தவர்கள் 'தமிழர்கள்' என்றும் முஸ்லிம்கள் 'இஸ்லாமியத் தமிழர்கள்' என்றும் அடையாளப்படுத்தப்பட்டனர். இஸ்லாமியத் தமிழர்கள் என்ற வார்த்தைப் பிரயோயகம் அப்போது சர்ச்சையைக் கிளப்பியது.
இதற்காக முஸ்லிம் தலைவர்கள் அப்போது போராடிப் பார்த்தார்கள். அது தமிழ்த் தரப்பில் எடுபடவில்லை. உடனடியாக ஒரு முரண்பாட்டு ரீதியில் முஸ்லிம் தலைவர்கள் அதை அணுகத் தொடங்கினார்கள். முஸ்லிம்கள் பேசும் தமிழில் அதிகமான அரபுச் சொற்கள் கலந்திருந்ததால், தமிழர்கள் புரிந்துகொள்ளமுடியாதபடி, முஸ்லிம்களால் தமிழில் பேசமுடிந்தது. இதனால், மொழிரீதியாக 'நீ வேறு நான் வேறு' என்ற விடயத்தை முஸ்லிம் தலைவர்கள் கதைக்கத் தொடங்கினார்கள். இது பிற்காலத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
அத்தோடு, முஸ்லிம் தலைவர்கள் 'சோனகர்கள்' என்னும் புதிய இனத்துவ அடையாளத்தினுள் முஸ்லிம்களை உட்படுத்தினர். எழுபதுகளின் பிற்பாடுகளில் இந்த சோனகர் என்னும் அடையாளம்கூட கொச்சைப்படுத்தப்படும் நிலை உருவாகிறது. 'சோனி' என்கிற இழிவான உச்சரிப்புடன் முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தும் விதத்தில் தமிழர்களால் பயன்படுத்தப்பட்டது. இந்த இழிநிலையைப் போக்குவதற்கு முஸ்லிம்கள் போராடிய அதே நேரத்தில் ஒரு தமிழ் புத்திஜீவியேனும் அதைக் கண்டிக்க முன்வரவில்லையே என்கிற ஆதங்கம் இருந்தது. இவ்வாறு பயன்படுத்தவேண்டாம் என்று ஒருவராவது குரல் கொடுத்திருந்தால், இனத்துவரீதியில் ஒரு ஒருமைப்பாட்டைக் கொண்டுவந்திருக்க முடியும். இதுதவிர, சிங்களர்களும் முஸ்லிம்களைக் கொச்சைப்படுத்தும் வார்த்தைகளால்தான் அழைத்தனர். அது சிங்களப்பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்களுக்கு பெரிய பிரச்சினையாக இருந்தது.
இலங்கை முஸ்லிம்கள் அதிகம் படித்தவர்களாக இருக்கவில்லை. மிகவும் பாமரத்தனமாக இருந்தார்கள். எனவே பிரச்சனைகளை ஆழமாகப் புரிந்து கொள்ளுதல், சமூகத்தோடு ஒன்றாகக் கலத்தல் போன்றவற்றை அவர்களால் பெரிதாகச் செய்ய முடியவில்லை. இலங்கை சுதந்திரப் போரட்டத்திலும் ஓரிரு தலைவர்களைத் தவிர அவர்கள் குறிப்பிடத்தகுந்த பங்கு வகித்திருக்கவில்லை. அரசியல் ரீதியாகவும் தங்களை உட்படுத்திக்கொள்ளவில்லை. அதை அவர்கள் தனித்துப் பார்க்கவே இல்லை.
அதே நேரத்தில் முஸ்லிம்களை இனரீதியாக பிரதிநிதித்துவப்படுத்திய பிரதிநிதிகள் சிங்களப் பிரதேசத்திற்குள் சிங்கள மக்களை அண்டி வாழ்ந்தார்கள். முஸ்லிம்களுக்கான அரசியல் அதிகாரம் என்பது முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பித்த 87களுக்குப் பிறகுதான் வருகிறது. அதுவரைக்கும் முஸ்லிம்களின் அதிகாரம் இருந்தது – வடகிழக்கிற்கு வெளியில் – சிங்களர்களை அண்டி வாழ்ந்த முஸ்லிம்களின் கையில் தான். அதனால் அவர்கள் சிங்களர்களை எதிர்க்கும் போக்கைக் கொண்டிருக்கவில்லை.
சுதந்திரத்திற்குப் பிறகு தமிழர்களுக்கு என்று தனிக்கட்சிகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. ஆனால் முஸ்லிம்களுக்கு அப்படி ஒன்று இல்லை. இலங்கையில் பெரும்பான்மையான முஸ்லிம்கள் வாழ்கிற பிரதேசம் வடக்கு, கிழக்கு மாகாணங்கள். அவர்கள் எல்லா அரசியல் போராட்டங்களிலும் தமிழர்களோடு தங்களை இணைத்துக் கொண்டார்கள். முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்த அஸ்ரப் தமிழரசுக் கட்சியின் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தோடு இணைந்து வேலை செய்தவர்தானே.
ஈழப்போராட்டம் ஆயுத வடிவத்திற்கு மாறியபின்பு, இஸ்லாமியத் தமிழர்கள் என்ற சொல்லாடல் பாரிய சிக்கல்களை ஏற்படுத்தத் தொடங்கியது. இருதரப்பும் ஒருவரையொருவர் எதிரிகளாகப் பார்க்கும் நிலைமை உருவானது.
மூன்று வருடங்களுக்கு முன்பாக தனியார் வானொலி நிகழ்ச்சி ஒன்றில் மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் இஸ்மாயிலுக்கும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பை சேர்ந்த ஒருவருக்கும் ஒரு கலந்துரையாடல் நடைபெறுகிறது. தமிழ்பேசும் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே நல்லுறவு வேண்டும் என்ற எண்ணத்தில் நடத்தப்பட்ட அந்த உரையாடலில் இஸ்லாமியத் தமிழர்கள் என்ற வார்த்தையை பிரயோகிக்க வேண்டாம என இஸ்மாயில் கூற, நீங்கள் வேறு நாங்கள் வேறு என்று பதில் கூறுகிறார் தமிழ்த்தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்தவர். அந்த உரையாடல் முழுவதும் இதுதொடர்பான விவாதம் தான் நடந்தது.
இதில் தவறு இருதரப்பு மீதும் இருக்கிறது. முஸ்லிம்களும் தங்களைத் தமிழர்கள் என்று சொல்வதை விரும்பவில்லை. மொழிமீது உள்ள பற்றினால் ஒரு முஸ்லிம் தன்னை தமிழர் என்று சொன்னால் அவரை விரோதியாகப் பார்க்கும் மனநிலையும் இலங்கை முஸ்லிம் சமூகத்தில் இருக்கிறது.
கீற்று: சிங்களப் பேரினவாதம் இந்தப் பிரிவினையை எப்படி பயன்படுத்திக் கொண்டது?
முஸ்லிம்கள் தங்களது இருப்பியல் சார்ந்த பிரச்சனைகளால், 1956களில் மொழிப்பிரச்சனை வந்தபோதும் மவுனமாகத்தான் இருந்தார்கள். பண்டாரநாயக்கா தனிச்சிங்கள சட்டம் கொண்டு வந்தபோதும் முஸ்லிம்கள் வாய்திறக்கவில்லை. தமிழ்த்தரப்பில் முஸ்லிம்கள் தங்களுக்கு ஆதரவு தரவில்லை என எடுத்துக் கொண்டனர். முஸ்லிம்களைத் தனிமைப்படுத்துவதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம்.
சிங்கள அரசாங்கம் முஸ்லிம்களை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கினர். முஸ்லிம்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் அதிகாரங்களை வழங்கினார்கள். 1972களில் பதியுதீன் மஹ்மூத்திற்கு கல்வி அமைச்சும், 77களில் ஏ.சி.எஸ்.ஹமீதுவிற்கு வெளிநாட்டு அமைச்சும் கொடுக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் கூட சபாநாயகராக ஒரு முஸ்லிமே இருந்தார். போராட்டக் குழுக்களோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்ட நபராக ஹமீது நியமிக்கப்பட்டிருந்தார். முஸ்லிம்கள் தங்களுக்கு சாதகமான நிலைப்பாடுதான் எடுப்பார்கள் என சிங்களர்கள் அபரிமிதமான நம்பிக்கை வைத்திருந்தார்கள். அபிவிருத்தித் திட்டங்களில் இந்த முஸ்லிம் தலைவர்கள் மூன்று சமூகத்தவரும் திருப்தி அடையும் வகையில் செயல்பட்டார்கள்; தேசிய இனப்பிரச்சினையில் சில அடிப்படைகளைத் தவறவிட்டுவிட்டார்கள்.
கீற்று: இது மறைமுகமாக முஸ்லிம்களை தமிழர்களுக்கு எதிராக திருப்பியது என்று எடுத்துக் கொள்ளலாமா?
ஆமாம். இந்த அடிப்படையில் தான் இஸ்லாமியத் தமிழர்கள் என்ற சொல்லாடல் மேலும் முனைப்புப் பெறுகிறது. இதை மேலும் மேலும் கூர்மைப்படுத்தியது சிங்களப் பேரினவாதம் தான்.
0 comments:
Post a Comment