Powered by Blogger.

இந்தியா – Google செய்திகள்

Re: சிங்களப் பேரினவாதம் முஸ்லிம்களையும் ஒடுக்குகிறது-முஸ்தீன்

Monday, August 2, 2010





கீற்று: அது எப்படி என்று கூறமுடியுமா?   

சிங்களர்கள் சில முஸ்லிம்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்ததன் தொடர்ச்சியாக நகர்ப்புறத்து வணிகம் சில முஸ்லிம்களின் கைகளில் இருந்தது. 70களின் தொடக்கத்தில் சிங்கள இனவாதிகள் பிரதான நகர்ப்புறங்களை தங்களது இன அடையாளத்தோடு கொண்டு வருவதற்காக மாதம்பை என்ற இடத்தின் மதிப்பை இழக்கச் செய்து, சிங்களமயப்படுத்தப்பட்ட ஒரு பிரதேசமான – புதிதாக உருவாக்கப்பட்ட சில்வா டவுன் வழியாக பிரதான போக்குவரத்துகள் அனைத்தையும் மாற்றினார்கள். 76-ல் புத்தளத்திலும் இதைச் செய்தார்கள். அதுவரை யாழ்ப்பாணம், கிளிநொச்சி போன்ற வடமாகாணங்களுக்குப் போகும் சகல வாகனங்களும் புத்தளம் வழியாகத்தான் செல்ல வேண்டும். அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் புதிதாக ஒரு சாலையை உருவாக்கி சிங்களமயப்படுத்தி அதன்வழியாக எல்லா வாகனங்களும் சென்று வருவதற்கான திட்டமிடுதலைச் செய்தனர்.

இதில் இருக்கும் பிரச்சனைகளைப் புரிந்து கொண்ட முஸ்லிம்கள் புத்தளத்திலுள்ள பொத்துவில்லு என்ற இடத்திலுள்ள பள்ளிவாசலில் ஒன்றுகூடி இதுகுறித்து விவாதிக்கின்றனர். அங்கு வந்து போலீசார் நடத்திய தாக்குதலில் ஒன்பது பேர் பள்ளிவாசலிலேயே கொல்லப்படுகின்றனர். நாற்பதுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இருநூற்றுக்கும் அதிகமான வீடுகள் அழிக்கப்படுகின்றன. இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றிருந்தவர் ஒரு முஸ்லிம் ஏ.எஸ்.பி. ஆனால் அது சிங்கள அரசு நடத்திய தாக்குதலாகத்தான் பார்க்கப்பட்டது.

அந்த முஸ்லிம் ஏ.எஸ்.பி. இடத்தில் ஒரு தமிழர் இருந்திருந்தால் இந்தப் பிரச்சனை வேறுமாதிரியாகப் பார்க்கப்பட்டிருக்கும். சிங்களர்களும், தமிழர்களும் இணைந்து முஸ்லிம்களுக்கு எதிராக நடத்திய தாக்குதல் என்றுதான் முஸ்லிம்தரப்பு பேசியிருக்கும். இது ஒரு துரதிருஷ்டவசமான நிலை. தன்பக்கம் உள்ள நியாயத்தை மட்டுமே பார்ப்பது என்பதை முஸ்லிம்கள் பக்கம் உள்ள ஒரு பிரச்சனையாகத்தான் நான் பார்க்கிறேன்.

முஸ்லிம்கள் சிங்கள அரசோடு சேர்ந்து போராளிகளை கொலை செய்ததாகவும், காட்டிக் கொடுத்ததாகவும் வரும் தகவல்களையும் இந்தப் பின்னணியில் தான் பார்த்தாக வேண்டும். ஒரு சாதாரண முஸ்லிம் துப்பாக்கி எடுத்து யாரையும் கொன்று விட முடியாது. செய்தவன் சிங்கள அரசாங்கத்தின் ராணுவத்தில், போலிசில் பணிபுரிந்த முஸ்லிம். அப்படியானால் அந்தச் செயலை செய்தது அரசாங்கம் என்பதையும், செய்தவன் அரசாங்க ஊழியன் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதையும் தமிழ்மக்கள் புரிந்து கொள்ளத் தவறி விட்டார்கள். அரசபடையினர் செய்த கொலையாகப் பார்க்காமல் முஸ்லிம்கள் செய்த கொலையாகத் தான் பார்த்தார்கள்.

இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். தமிழ்ப் போராட்ட அமைப்புகளில் இருந்த முஸ்லிம்களும், முஸ்லிம்களைக் கொன்றார்கள். ஆனால் அப்போது அவர்களை விடுதலைப் போராளிகளாகத்தான் பார்த்தார்களே தவிர முஸ்லிம் என்று யாரும் அடையாளப்படுத்தவில்லை. குறிப்பிட்ட அமைப்பைத் தான் அடையாளப்படுத்தினார்கள்.

90களுக்குப் பிறகு தான் முஸ்லிம்கள் 100 வீத ஒருமைப்பாட்டுடன் சிங்கள ராணுவத்தில் சேர்கின்றனர். நான் ஒரு முஸ்லிம் என்கிற ஒரே காரணத்திற்காக கொல்லப்படுகிறேன், வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டேன் என்ற உணர்வுதான் அவர்களது இந்த நிலைப்பாட்டிற்கு காரணம்.

90களுக்குப் பிறகு இயக்கத்தில் இருந்த முஸ்லிம் போராளிகள் நிறைய பேர் கொல்லப்பட்டார்கள். இதை பிரபாகரன் உத்தரவின் பேரிலேயே செய்ததாக 'உறங்காத உண்மைகள்' என்ற பெயரில் வெளிவந்த சி.டி.யில் கருணா அம்மான் குறிப்பிட்டிருந்தார். இதை அவர் பிரபாகரனிடமிருந்து பிரிந்து வந்த பின்னால் சொன்னதால் நாங்கள் அதை முழுக்கவும் நம்பி விடவில்லை. அந்த கொலைகள் நடைபெறும்போது கருணாவும் எல்.டி.டி.யில் தான் இருந்தார் என்பதையும் நாங்கள் மறந்து விடவில்லை.

ஏனெனில் கிழக்கில் அப்போது கருணா தான் தளபதியாக இருந்தார். அப்படியானால் அங்கு கருணாவிற்கு கீழிருந்தவர்களை அவர்தானே கொன்றிருக்க வேண்டும்? அதைப்பற்றி பேசாமல் பிரபாகரன்தான் குற்றவாளி என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். இப்போதெல்லாம் எல்லாப் பழிகளும் பிரபாகரன் மீதே சுமத்தப்படுகிறது. அனைத்திற்கும் அவரே பொறுப்பேற்க வேண்டும், தங்களுக்கு இதில் சம்பந்தம் இல்லை என்பது போன்ற தோரணையில் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. புலிகள் இல்லாத வெற்றிடத்தில் இதுமேலும் வலுப்பெறுகிறது. இப்படிப் பார்ப்பது தவறு; இது பிரச்சினையில் இருந்து இன்னொரு தரப்பு தப்பிக் கொள்வதற்கான உத்தியாகும். இப்படித்தான் ஒருபக்க பார்வையோடு பிரச்சனைகள் பேசப்படுகின்றன.

கீற்று: கொழும்புவில் தமிழர்கள் அதிகாரமற்று இருந்தார்கள். முஸ்லிம் மக்களும் அப்படித்தான் இருந்தார்களா? இதுபற்றி சொல்லுங்கள்?

கொழும்பு மட்டுமல்ல இலங்கையில் முஸ்லிம்கள் வாழும் எல்லாப் பகுதியிலும் அவர்கள் அதிகாரமற்று தான் வாழ்ந்தார்கள். விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள் தான் அதிகாரத்தில் இருந்தார்கள்.

2.

கீற்று: தமிழர்கள் தங்களுக்கு என்று போராட்ட அமைப்புகளை ஏற்படுத்தியது போல் முஸ்லிம் மக்களுக்கு என்று ஏதாவது போராட்ட அமைப்பு இருந்ததா?

1976ஆம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி சிங்களக் காவல்துறை முஸ்லிம்களுக்குச் செய்த கொடுமைகளுக்குப் பிறகு எஸ்.ஜே. வி. செல்வநாயகம்தான் பாராளுமன்றத்தில் இப்பிரச்சினையை பேசினார். ஆனால் அங்கிருந்த முஸ்லிம் உறுப்பினர்களும் அதற்காகப் பேசவில்லை. 'முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுக்க கட்சி ஒன்றைத் தொடங்குங்கள்' என முஸ்லிம் தலைவர்களை செல்வநாயகம்தான் அறிவுறுத்தினார். இப்படியாக 1986ல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டது. அதை போராட்டக்குழுக்கள் அங்கீகரிக்கவில்லை. அந்தக் கட்சிக்கு எதிரான எல்லா வேலைகளையும் புலிகள் இயக்கத்தில் இருந்த முஸ்லிம் ஆட்களும் செய்தார்கள்; ஈரோசில், ஈபிடிபி மற்றும் ஈபிஆர்எல்எப் இயக்கத்தில் இருந்த முஸ்லிம்களும் செய்தார்கள். 1987ல் மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட முடிவெடுத்த நிலையில், 'தேர்தலில் போட்டியிட்டால் மரண தண்டனை' என்று விடுதலைப் புலிகள் பிரகடனப்படுத்தினார்கள். தடையை மீறி, தேர்தலில் போட்டியிட்டு, வடக்கு கிழக்கில் 17 ஆசனங்களையும், ஏனைய பகுதிகளில் 12 ஆசனங்களையும் பெற்று, பிரதான எதிர்க்கட்சியாக மாறியது.



0 comments:

Post a Comment

CRICKET CURRENT NEWS

CRICKET INFO LATEST PHOTO WIDGETS

  © Blogger template dev by Ourblogtemplates.com 2009

Back to TOP