Re: சிங்களப் பேரினவாதம் முஸ்லிம்களையும் ஒடுக்குகிறது-முஸ்தீன்
Monday, August 2, 2010
கீற்று: ஆனால் புலிகள் இயக்கத்திலும் நிறைய முஸ்லிம்கள் இருந்தார்கள் அல்லவா, அவர்கள் எப்படி இயங்கினார்கள்?
வடகிழக்குப் பகுதியில் விடுதலைப்புலிகள் சமூக அங்கீகாரமற்றிருந்த முஸ்லிம் இளைஞர்களை தங்களது அமைப்பில் பெருவாரியாக இணைத்துக் கொண்டார்கள். முஸ்லிம் பகுதிகள் தங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களை உள்வாங்கும் ஒரு பரந்துபட்ட வேலையை புலிகள் 1983ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து செய்தார்கள். புலிகள் இயக்கத்தில் சேர்ந்த சில முஸ்லிம்கள், ஆயுதப்பயிற்சி பெற்றபின்பு, அவர்கள் வாழ்ந்த கிராமங்களில் அதிகாரம் செலுத்தத் தொடங்கினர். முஸ்லிம் பகுதிகளில் இருந்த சில சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுடன் இணைந்து மக்களை மிரட்டுவது, பணம் பிடுங்குவது போன்ற செயல்களில் இந்த முஸ்லிம் இளைஞர்கள் ஈடுபட்டார்கள். இச்செயல்பாடுகள் சமூகத்தின் எதிர்ப்பைச் சம்பாதித்தன. இப்படிப்பட்ட செயல்பாடுகளால் முஸ்லிம் சமுதாயம் புலிகள் இயக்கத்தைத் தவறாகக் கருதத் தொடங்கியது. புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டுத் தளத்தில் இயங்காமல் அடக்குமுறைகளை அவ்வியக்கத்தில் இருந்த முஸ்லிம்கள் செய்ததை – முஸ்லிம் மக்கள், புலிகள் இயக்கம் செய்வதாகவே புரிந்து கொண்டனர்.
புலிகள் அமைப்பில் இருந்த முஸ்லிம் இளைஞர்கள் அதிகாரம் செலுத்தத் தொடங்குவது கிழக்கில் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கவில்லை. அங்கிருந்த மக்கள் புலிகளின் தவறுகளோடு அவர்களை சகித்துக்கொள்கிறார்கள். புலிகளுக்கு எதிராகப் பேசவும் இல்லை, செயல்படவும் இல்லை. எதிர்ப்பு என்பது மன அளவில் இருந்தாலும் 1990ஆம் ஆண்டுவரை யாருமே அவ்வெதிர்ப்பை பகிரங்கமாக வெளிக்காட்டவில்லை; ஏனெனில் அங்கிருந்த முஸ்லிம் பகுதிகளில் பெரும்பாலானவை புலிகளின் நூறுவீத ஆளுகைக்குள் இருந்தது.
ஆனால் வடக்கில் நிலைமை இதற்கு மாறாக இருந்தது. எருக்கலம்பிட்டி ஊரில் இருந்த படித்த முஸ்லிம் இளைஞர்கள்தான் இதை ஒரு பிரச்சினையாக உணர்கிறார்கள். போராளிக் குழுக்களில் இருந்த முஸ்லிம் இளைஞர்களின் சில தவறான அணுகுமுறைகள் இஸ்லாமிய சமய மற்றும் சமூக நலன்களுக்குப் பாதகமாக அமைகிறது என்று எண்ணுகிறார்கள். அதன்விளைவாக அனைத்து ஆயுதக்குழுக்களையும் இதே கண்ணோட்டத்தில்தான் பார்க்கிறார்கள். ஈரோசு, ஈபிடிபி, புளோட்டு, ஈபிஆர்எல்எப் ஆகிய தமிழ்த்தேசிய விடுதலை இயக்கங்கள் எல்லாவற்றிலும் நம்பிக்கை இழந்திருந்தனர்; இன்னும் சொல்லப்போனால் அவர்களை எதிரிகளாகப் பார்த்த நிலைதான் இருந்தது. அந்தச் சூழலில் அரசப் படைகளின் உதவியைப் பெற்றால் மட்டும் தான் இந்த அமைப்புகளிடம் இருந்து தப்பலாம் என்னும் நிலைப்பாட்டை முஸ்லிம்கள் எடுக்கிறார்கள். ஆனால் முஸ்லிம் தரப்பில் இருந்த எந்தவொரு அமைச்சரும் இந்நிலைப்பாட்டை ஆதரிக்கவில்லை.
'ஆயுதக் குழுக்களால் இயல்பு வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு அமைச்சகத்திடம் பேச வேண்டும்' என்றும் 'தங்களுக்கு ஆயுதப் பயிற்சி தர வேண்டும்' என்றும் ஒரு காலகட்டத்தில் அமைச்சர் எம். எச். முகமதைச் சந்தித்துக் கூறுகிறார்கள். அக்கோரிக்கையை அப்போது எம். எச். முகமது மறுத்துவிடுகிறார். 'நீங்கள் இதைச் செய்ய மறுத்தால் நாங்கள் தமிழ் ஆயுதக்குழுக்களிடம் சென்று ஆயுதப் பயிற்சி பெறுவோம். அவர்கள் உங்களைக் கொல்லச் சொன்னால் அதற்கும் தயங்க மாட்டோம்' என்று கூறுகிறார்கள். அதன் பின் தான் எம். எச். முகமது அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலியைச் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்கிறார்.
'அரசு எங்களுக்கு ஆயுதப் பயிற்சி தரவேண்டும்; ஆயுதங்களும் தரவேண்டும். அரசு முஸ்லிம் பகுதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இப்படிச் செய்யப்பட்டால் நாங்கள் இராணுவத்திற்கு ஒத்துழைப்போம். ஆனால் இராணுவம் எங்கள் மக்கள் மீது அநியாயமாக நடந்தால் அதற்கு எதிராகவும் போராடுவோம்' என்ற விடயத்தை அவர்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் முன்வைக்கிறார்கள். அதற்குப் பிறகு முப்பத்து மூன்று முஸ்லிம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்பின்னர் இரண்டாம் கட்டமாக இலங்கை இராணுவம் இருநூற்றைம்பது முஸ்லிம்களுக்குப் பயிற்சி கொடுத்தது. இந்தப் ஆயுதப் பயிற்சி பெரிய அளவில் கொடுக்கப்படவில்லை என்றாலும் வெளியே முஸ்லிம் மக்கள், தமிழ் போராளிகளுக்கு எதிராக ஆயுதப் பயிற்சி பெறுகிறார்கள் என்று மிகப்பெரிதாகக் கதைக்கப்பட்டது. இவர்களிடம் பெரிய ஆயுதங்கள் இல்லாதபோது, அப்படி இருப்பதாக பெரிய அளவில் கதைகளை இவர்களும், அந்தப் பிரதேசத்து முஸ்லிம் மக்களும் ஏனைய தமிழ் ஆயுதக் குழுக்களை அச்சுறுத்தும் வகையில் கட்டிவிடுகிறார்கள்.
தொடக்கத்தில் எந்தவொரு தமிழ் ஆயுதக் குழுவும் முஸ்லிம் பகுதிகளுக்குள் நுழையக் கூடாது என்பது தான் இவர்களுடைய நோக்கமாக இருந்தது. இதற்காக ஒருகட்டத்தில் எருக்கலம்பிட்டி ஊரின் முகப்பில் முஸ்லிம் மக்கள் ஒரு சோதனைச்சாவடி அமைத்திருந்தார்கள். போராளிகளைத் தேடிப் போய் அழிக்கும் நோக்கமும் அவர்களிடம் இல்லை; அதற்குரிய வலுவும் இல்லை.
முஸ்லிம் இளைஞர்கள் இராணுவத்திடம் தஞ்சமடைவதற்கு புலிகள் இயக்கத்தில் இருந்த முஸ்லிம்களில் சிலர் செய்த தவறுகள்தான் பிரதான காரணமாகிறது. புலிகள் இயக்கம் ஒரு கட்டுக்கோப்பான இயக்கமாக இருந்தாலும் இத்தவறுகளை இயக்கத்தின் மேல்மட்டத்தில் இருந்த தலைவர்கள் கண்டிக்கத் தவறிவிட்டார்கள் என்று தான் சொல்ல முடியும். முஸ்லிம் தரப்பும் இதுகுறித்து வெளிப்படையாக கதைக்கத் தயாரில்லாத நிலையில்தான் இருந்தது. இதனால் வந்த பாரியப் பின்விளைவுதான் புலிகள் மீதான எதிர்ப்பாக மாறிவிட்டது.
'சிங்களப் படைக்கு ஆதரவாக முஸ்லிம் இளைஞர்கள் சேர்ந்துவிட்டார்கள்' என்பது போன்று வெளியே உருவாக்கப்பட்ட தோற்றப்பாட்டைக் கண்டு ஏனைய தமிழ் விடுதலை அமைப்புகளும் அஞ்சத் தொடங்கின. 'இராணுவம் எங்கள் மக்களைக் கொடுமைப்படுத்தினால் அதற்கு எதிராகவும் நாங்கள் மாறுவோம்' என்று முஸ்லிம் குழுக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் சொல்லியிருந்தது சரியாகப் பதியப்படவில்லை. இதன்பின்னர் இராணுவத்தில் இணைந்த முஸ்லிம் இளைஞர்களை வழிநடாத்தியவர்கள் தமிழ் போராளிக்குழுக்களால் இலக்கு வைத்துக் கடத்தப்படுகிறார்கள். ரம்ஸீன் என்பவர் ஈரோஸ் அமைப்பால் கடத்தப்பட்டார்; அமீன் என்பவர் ஈபிஎல்ஆர்எப் அமைப்பால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டார்; 1985ஆம் ஆண்டு பாயிஸ் என்பவரைக் குறிவைத்து வவுனியாவில் புலிகள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் அவரோடு பேருந்தில் இருந்த ஐம்பத்து மூன்று பேர் மாண்டுபோனார்கள். அந்த ஐம்பத்து மூன்று பேரில் தமிழ், முஸ்லிம், சிங்களப் பொதுமக்கள் இருந்தார்கள். இந்தத் தாக்குதல்கள் முஸ்லிம் மக்களிடம் ஈழப்போராட்டத்தையே வெறுக்கச் செய்யுமளவிற்கு எதிர்ப்புணர்வைக் கிளப்பியது. இதுதான் வடக்கு மாகாணத்தின் நிலையாக இருந்தது.
இந்திய இராணுவம் (ஐபிகேஎப்) இலங்கை வந்தபோது, 'எருக்கலம்பிட்டி இளைஞர்களை இலங்கை இராணுவத்திடம் பயிற்சி பெற்றவர்கள்' எனப் பார்க்காமல் தனி ஆயுதக் குழுக்களாகத் தான் கருதியது; கைது செய்து சித்திரவதை செய்தது. அவ்வேளைகளில் இலங்கை அரச ராணுவம் கூட அவர்களைக் கைவிட்டது. அதன் பிறகு இந்திய இராணுவத்தின் மன்னார் மாவட்டத் தளபதியாக இருந்தவரிடம் ஆயுதங்கள் எல்லாவற்றையும் கையளிக்கிறார்கள்.
ஆரம்பத்தில் விடுதலைப் போராட்டத்திற்கு தங்களுடைய பங்களிப்பையும் செய்திருக்கிறார்கள். பேரினவாத சக்திகளின் – முஸ்லிம், தமிழர் பிளவை கூர்மைப்படுத்துகின்ற – திட்டமிட்ட நகர்வை இருதரப்பாருமே புரிந்துகொள்ளத் தவறிவிட்டார்கள். இரண்டு சமூகத்தின் அரசியல்வாதிகளுமே இதை ஒரு விடயமாகவே விளங்கிக் கொள்ளவில்லை.
கீற்று: எந்த மாதிரி என்று சொல்ல முடியுமா?
88களில் முஸ்லிம் மக்களின் மீது பரவலாக நடத்தப்பட்ட தாக்குதல்களை அரசு கண்டுகொள்ளவேயில்லை. சிங்கள மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை பெரிய அளவில் பேசிய அளவிற்கு, முஸ்லிம்களின் மீதான எந்தத் தாக்குதலையும் பேசவில்லை. அதோடு, இழப்புகளுக்கு எந்த நிவாரணத்தையும் அரசு சரியாகச் செய்யவில்லை. சிங்களவர்கள் என்றால் பெரிய அளவில் முக்கியத்துவமும், முஸ்லிம்கள் என்றால் ஓரவஞ்சனையோடும் பார்க்கப்பட்டது.
பேரினவாத அரசு தமிழ் மக்கள் – தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள் இடையே நடக்கும் கொலைகளை மவுனமாக வேடிக்கை பார்த்தது. வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதையும் அரசு நினைத்திருந்தால் தடுத்திருக்க முடியும். பேரினவாதத்திற்கு தமிழ் – முஸ்லிம் வேறுபாடு என்பது ஒரு அவசியத் தேவையாக இருந்தது. அதை வெற்றிகரமாக பேரினவாதம் செய்து முடித்தது. முஸ்லிம் தரப்புத் தலைமைகளும், தமிழ்த்தரப்புத் தலைமைகளும் அதை உணர்ந்து கொள்ளவே இல்லை.
0 comments:
Post a Comment